பாடசாலை வரலாறு

கிளிநொச்சி கல்வி வரலாற்றில் தனக்கென தனித்துவமான இடத்தினை பெற்ற பாடசாலை எனும் பெருமை கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு உண்டு. சேர். பொன் இராமநாதனின் பெருமுயற்சியின் விளைவாக இரணைமடு குளக்கட்டுமானப்பணிகளிற்காக வந்த குடும்பத்தவர்களது பிள்ளைகளின் கல்வி தேவையை நிறைவேற்றும் வகையில் 1929.07.03 ல் ஒரு ஏக்கர் அளவான காணியில் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலையின் முதல் தலைமை ஆசிரியர் திரு.ஜே.என்.சரவணமுத்து ஆவார்.

ஆரம்பத்தில் நாற்பதளவான மாணவர்களை மட்டும் கொண்டு இரு நேரப்பாடசாலையாக இயங்கிய இப்பாடசாலை படிப்படியாக மண்டபம் – ஆசிரியர் விடுதி என்பவற்றை பெற்று வளர்சியடைந்தது. 1955ல் ஆறு வகுப்புக்களை கொண்டியங்கிய பாடசாலை எனும் அளவிற்கு குறிப்பிடத்தக்க மாற்றங்களை பெற்றது.

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் கல்வி வரலாற்றில் 1938ம் ஆண்டு முக்கியமானதாகும். அதே ஆண்டில் ஜே.எல்.சி வகுப்புக்கள் தொடங்கப்பட்டன. 1963லேயே மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டமை கவனிப்புக்குரியது. 1964 முதல் க.பொ.த சாதாரண தர வகுப்புக்கள் நடைபெற்று வந்தது.

கிளிநொச்சியின் சனத்தொகையானது வளர்சியடைய தொடங்கிய நிலையில் 1979ல் பாடசாலையில் இருந்து ஆறிற்கும் மேற்பட்ட வகுப்புக்கள் பிரித்தெடுக்கப்பட்டு கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம் உருவாக்கப்பட்டது. அதே வேளை இப்பாடசாலை கனிஸ்ட மகாவித்தியாலயமாக இயங்க தொடங்கியது. கல்வி இணைபாடவிதான செயற்பாடுகளில் தனித்துவத்தினை பேணிய கனிஸ்ட மகாவித்தியாலயம் 1993 லிருந்து உயர்தர கலை மற்றும் வர்த்தக வகுப்புக்களை ஆரம்பிக்கும் தகுதியை பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் தாய்ப்பாடசாலையாக மிளிரும் கிளிநொச்சி மகாவித்தியாலயம் நகர மத்தியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அரசியல சமூக பொருளாதார மாற்றங்களை எதிர்கொண்டு நாட்டின் நெருக்கடியான சூழ்நிலையில் 10க்கும் மேற்பட்ட தடவைகள் இடம்பெயர்ந்து வளங்கள் பலவற்றினை இழந்த போதிலும் நம்பிக்கை தளராது மீண்டும் தன்னை நிலைப்படுத்தி நிமிர்ந்தமை பாடசாலையின் சிறப்பிற்கு சான்றாகும். 2008ல் பெரும்போரால் பௌதீக வளங்களில் பேரளிவினை சந்தித்த பாடசாலை 2010 ஜனவரி 19ல் மீளக்குடியேறிய சூழலில் மீண்டும் கல்வி மற்றும் இணைபாடவிதான செயற்பாடுகளில் முன்னிலை பெற்று திகழ்ந்தது.

அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் கூட்டு உழைப்பினால் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தேசிய ரீதியிலும் புகழ் பரப்பி வரும் கிளிநொச்சி மகாவித்தியாலயம் 2013.05.06ல் 1ஏபி பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு கணித விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டமை ஒரு பிரதாக விடயமாகும். 2015ம் ஆம் ஆண்டு 37 மாணவர்கள் கணித விஞ்ஞான பிரிவுகளில் இருந்து உயர்தர பிரிவிற்கு தோற்றியவர்களில் ஒருவர் மருத்துவபிரிவிற்கும் மேலும் நால்வர் ஏனைய உயிரியல் துறைக்கும் மற்றும் கணித பிரிவில் 08 மாணவர்களும் மற்றும் வர்த்தக கலை துறைகளில் முறையே 08 மற்றும் 06 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்தனர். தொடர்ந்து தற்போது கணித விஞ்ஞான பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவர்களின் தொகை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புலமைப்பரிசில் பரீட்சை சாதாரண தரப்பரீட்சை மற்றும் உயர்தரப்பரீட்சைகளில் தேசிய நிலையில் எமது மாணவர்களின் அடைவுகள் உயர்வாக உள்ளது. மேலும் இச் செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கான பொறிமுறைகளை இணங்கண்டு அவை தொடர்பான பயிற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தற்போது ஆரம்பக்கல்வியில் 913 மாணவர்களையும் இடைநிலைப்பிரிவில் 1244 மாணவர்களையும் 312 உயர்தர மாணவர்களுமாக 2469 மாணவர்களையும் 95 ஆசிரியர்களையும் கொண்டதாக தற்போது உள்ளது.

நாளைய தொழில் உலகிற்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கும் மனித விழுமியங்களை பேணும் மாணவர்களாக அவர்களை தகவமைப்பதற்கும் களமாக கிளிநொச்சி நகரின் அறிவாலயமாக மிளிரும் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்து உழைத்த அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் போற்றுதற்க்குரியவர்கள்.  பாடசாலையின் செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னோக்கி செல்வதற்கு அனைவரது கூட்டு முயற்சியே காரணமாகும்.